Sunday, September 14, 2014

ஜாதிச் சவடாலும் வீங்கிய மண்டையும் (Jaadhi Savadaalum Veengiya Mandaiyum)

கிறித்தவன் சிலுவையும் துலுக்கன் தாடியும் பிராமணன் பூணூலும் உயிர் உலவிடும் வாழும்-பிணத்தின் மீது வேண்டுமானால் பொருள் படலாம், அனால், உயிர் பிரிந்த பின்னாலே, பிணம் பிணம் தானே? மரித்தப் பின் அம்மணமாய் படுத்து கிடக்கும் பிணங்கள், பட்டையும், நாமமும் போட்டலங்கரித்த காரணத்தினால் வேறுப்பட்டு விடுமா? பூசிய அரிதாரத்தையெல்லாம் கலைத்து விட்டால் எவன் முதலியார், எவன் செட்டியார், எவன் பிராமணன், எவன் ஹரிஜன்?

ராஜஸ்தானில் தற்போது நடைமுறையில் உள்ள இடுகாட்டு ஜாதிப் பிரிவினை பற்றி கேள்விப்பட்டு இந்த கட்டுரையை எழுத தொடங்கினேன்.  இரண்டாயிரத்து பதினாலாம் ஆண்டு ஆகியும் இந்த இழிநிலைமை பிசாசு நம்மை பிடித்து ஆட்டித் தொலைக்கும் என்று நாம் நினைத்து கூட பார்க்கவில்லையே! கட்டையாய்  போன பிணங்களை இடுகாட்டுக்கு மக்கள் கொண்டு வந்தப் பின்னர், அங்கே அவரவர் ஜாதிக்கேற்ற மாதிரி பிணங்கள் பிரிக்கப்பட்டு, வேறு வேறு அறையிலே கொளுத்தப் படுமாம்! ஆஹா, பேஷ், பேஷ், கேக்கவே ரொம்ப நன்னா இருக்கே!

இந்த மாதிரி ஜாதிப் பிரிவினைகளைப் பற்றி பேசும் போதெல்லாம் வேற்றுமையை ஒழிக்க வந்த சில மகான்கள் நம் மனதினிற்க்கு வருவர்! தந்தையே பெரியாரே, மகாகவி பாரதியே, நிவீர் எங்கே போய் தொலைந்தீர்கள்?


ராமசாமி நாயக்கர் மீது எனக்கு அலாதி ஈர்ப்பு! சாதாரண சிறுதொழில் முதலாளியாகவே அறியப்பட்டவர் அவர், அதுவும் ஈரோட்டில் மட்டுமே! மனிதர்களில் ஏற்ற தாழ்வு இல்லை, எல்லாரும் ஒரே ஈடுதான் என்ற எண்ணம் மனதில் திண்ணமாக தோன்றியபின் ராமசாமி திடிரென தந்தை பெரியாராக விஸ்வரூபம் எடுத்தார்! பெருமாளின் விஸ்வரூபத்தை விட நமது தேசத்துக்கு முக்கியமாக தேவைப்பட்ட விஸ்வரூபம் அது தான்! அன்னாரின் புரட்சியால் சந்தி சிரித்த தாழ்த்தப் பட்டவனது முகத்தில் சந்தோஷ சிரிப்பு பூத்தது! அவலம் பிடித்த வாழ்க்கையை ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து அம்போ என்று மடிந்து மண்ணாகிப் போன நலிந்தவன் என்றைக்கு தான் முன்னுக்கு வருவான்?


வாமனாவதரமாக வந்த ராமசாமி நாயக்கர் வானளாவ எழுந்து நின்றார் பெரியாராக!

சமூக மாற்றத்தை உண்டு பண்ண வேண்டும் என்றால் தனி மனிதனாக இருந்து ஒண்ணும் பண்ண முடியாது என்று அவர் நன்றாக அறிந்திருந்தார். காங்கிரஸ் கழகத்தில் சேர்ந்தார். வெள்ளைக்காரனை வெளியற்றுவதர்காக உருவாக்கப் பட்ட காங்கிரஸ்ஸில் சமூக மாற்றம் உண்டாக்கும் நோக்கத்தோடு சேர்ந்த பெரியார், நாளடைவில் தவறாக, தான் தவறான கழகத்தில் சேர்ந்து விட்டோம் என்று புரிந்து கொண்டார்! மேல் ஜாதிக்காரர்கள் வியாபித்திருந்த காங்கிரஸ் கழகத்தில் பெரியாரின் உன்னதமான குறிக்கோள் மதிக்கப்படவில்லை. மேலும் காங்கிரஸ்சில் இன்னொரு பிரச்சினை. அவர்கள் இந்தியை தமிழ்நாட்டில் திணிக்க எத்தனித்தார்கள். தனது குறிக்கோளும் காங்கிரஸ் பார்ட்டியின் குறிக்கோளும் வேறு வேறு என்று புரிந்து கொண்ட பின்னர், காங்கிரஸ்சிலிருந்து வெளியேற தந்தை பெரியார் சற்றும் மனக் கிலேசப் படவில்லை. அவரின் சமூக சீர்த் திருத்த பாதை தெளிவானதாக தான் இருந்திருக்கிறது! இந்தியாவின் சுதந்திரம் ஒரு புறம் இருக்கட்டும், தாழ்த்தப்பட்டவனது சுதந்திரம் தான் தனது பிரதானம் என்று தனது மனதில் தெளிவு படுத்திக் கொண்டார் பெரியார்!

பெரியார் செய்த அனைத்தையும் நன்றே என்று சிலாகித்து கூற முடியாது! ஆனால் தமிழ்நாட்டையே புரட்டி போடும் விதமாக தைரியமாக பல காரியங்களை அவர் செய்தார்! சக்தி மிகுந்து கோலோச்சிவரும் உயர்ந்த ஜாதிக்காரனை எதிர்த்து பெரியதாக கொடி தூக்கி ரணகள படுத்த துணிந்து போராட யாருக்கு தான் இத்தனை தைரியம் வரும்? தாழ்ந்த ஜாதிக்காரனுக்கும் நூல் அணிவித்து அவனை உயர்ந்த ஜாதிக்காரனாக்கி விட்டேன் பார்த்தாயா என்று பாரதி பிரகடனப் படுத்தினான்! ஆனால் பெரியாரோ, அது என்ன உயர்ந்த ஜாதிக்காரனுக்கு மட்டும் பிரத்யேகமாக ஒரு நூல், அந்த நூலையே நான் அறுக்கிறேன் பார் என்று ஒரு வீராப்புடன் கிளம்பி அலம்பல் செய்தார்! பாவம் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றிருந்த ராமருக்கும் கிடைத்தது செருப்பு மாலை!

சமூக மாறுதலை ஏற்படுத்த பெரியார் பின்பற்றிய முறை சரியா தவறா என்று நாம் ஆராயலாம், அதில் நாம் வேறுபடலாம், அனால், அந்தக் காலத்தில் சமூகத்தில் ஒரு மாறுதல் நிச்சயமாக தேவை பட்டது என்பதை யாராலும் மறுக்க இயலாது! மேன்மக்கள் என்றும் தாழ் மக்கள் என்றும் என்றைக்கோ மனுதர்மம் செய்த பிளவை எத்தனை காலம் தான் நாம் சமச் சீர் செய்யாது வேற்றுமை பாராட்டிக் கொண்டே இருப்பது?

பெரியார் விட்டு சென்ற பகுத்தறிவு பாசறையில் கருணாநிதி மாதிரி புல்லுருவிகளும் கபோதிகளும் உள்ளே புகுந்து தனது குடும்பத்துக்கு என்ன லாபம், என்று கணக்கு பார்த்து கொள்ளையடித்தது வேறு கதை! ஆனால், இந்த பாழாய் போன உலகத்தில் தாழ்ந்த ஜாதியில் பிறந்து கஷ்டப்பட்ட அந்த சோகமே உருவானவனுக்கு இந்த காலக் கட்டத்திலும் கூட சாவிலும் கிடைக்கவில்லை பார்த்தாயா சம நிலைமை! உயர்ந்த ஜாதிக்காரனின் உசத்தியான பிணம் சந்தனக் கட்டையின் வாசத்துடன் கமகமவென்று வெந்து கொண்டிருக்கும் போது தாழ்த்தப்பட்ட இவன் மாத்திரம் தனியாக வேறு அறையில் வெந்து தொலைக்க வேணுமாம்! இது என்ன நியாயமடா சாமி!

இறைவன் போட்ட லாட்டரி சீட்டில் வெறும்  அதிர்ஷ்டத்தால் மாத்திரமே சிலர் உயர்ந்த ஜாதியில் பிறந்தனர். நான் உசத்தி நீ தாழ்த்தி என்று வாய்ச் சவடால் பேசி ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்தாயிற்று! வருடங்கள் மில்லேனியமாக உருண்டோட அவர்கள் மண்டை பெருத்து வீங்கிற்று! பாரதத்  தாயே, ஜாதி வேற்றுமை பார்க்கிறவனுக்கு நஞ்சு கலந்த முலைப்பால் கொடுத்து நசுக்கித் தொலைக்க மாட்டாயா!

கணிணிப் பேனாவினால் இணையதளத்தில் கிறுக்குவதை தவிர வேறு சக்தியற்ற  இந்த சாதாரண மானுடன் வேறு என் செய்வான்! கால தேவதையே! நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா! கால மாறுதலை நீ கொணர்வாய் என நான் நன்கு அறிவேன்! அதனை சற்றே சீக்கிரம் செய்வாயாக! இம்மாநிலம் பயனுறவே!

No comments:

Post a Comment