எத்தனை அற்புதமான கவிஞன் மஹாகவி பாரதி! சாதாரண தமிழில் சாதாரண கருத்து சொல்லும் பாடல் போல ஆரம்பித்து அதில் அறிவியலையும் அத்வைதத்தையும் கலந்து அம்சமாக சொல்லும் அவரின் புலமை கண்டு பிரமித்துப் போய் இந்த கட்டுரையை எழுத எத்தனித்தேன்!
தமிழென்றும் நாத்திகமென்றும் கரை வேட்டி கட்டி பகட்டாக பேசி தனது பாக்கெட்டுக்கு எத்தனை காசு வந்ததென்ற ஒரே சிந்தனையுடன் காலம் தள்ளும் சில கழக கண்மணிகள் இந்த பாட்டை கேட்க வேண்டும்! மணிரத்தினத்தின் இருவர் பட "நறுமுகையே" பாட்டில் தான் எதோ இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு சங்க கால தமிழ் மொழியை அருமையாக இந்த கால மெட்டில் புகுத்தி எழுதிவிட்டதாக நினைத்தது மார் தட்டி கொள்ளும் கவிப்பேரரசு வைரமுத்துவும் இந்தப்பாட்டை கேட்க வேண்டும்!
மிகவும் சாதரணமான வார்த்தைகள், அனால் அதில் இயற்கையன்னையிடம் அவர் கண்ட பிரமிப்பை பாரதி எத்தனை அழகாக சொல்லி போய் விட்டார் இந்த பாட்டில்! கவிப்பேரரசு போல இந்த பாட்டிற்கு பாரதி என்ன லட்சம் லட்சமாகவா காசு வாங்கினார்!

பல்லவி:
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!
எங்கள் இறைவா! இறைவா! இறைவா!
சரணம்:
சித்தினை அசித்துடன் இணைத்தாய்!
அங்கு சேரும் ஐம்பூதத்து வியன் உலகமைத்தாய்!
அத்தனை உலகமும் வர்ண களஞ்சியமாக
பல பல நல் அழகுகள் சமைத்தாய்!
முக்தியென்றொரு நிலை சமைத்தாய்
அங்கு முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்!
பக்தியென்றொரு நிலை வகுத்தாய்!
பரமா பரமா பரமா!
மேலே உள்ள பாட்டில் நான் கண்ட கவித்துவத்தை கூறுகிறேன் கேளுங்கள்! தமிழ் தெரிந்த அனைவருக்கும் பல்லவி புரிந்திருக்கும். சாதாரண மொழியில் தான் உள்ளதல்லவா! சரணத்தின் முதல் வரியை பாருங்கள்! "சித்தினை அசித்துடன் இணைத்தாய்"! சித்து என்கிற வார்த்தையை (மாயம் என்கிற அர்த்தம் கொள்வது) உபயோகபடுத்திவிட்டு உடனேயே "அசித்து" என்கிற நேர்மாறான வார்த்தையை பயன் படுத்துகிறார்! உயிர் உள்ள எல்லாவற்றையும் நான் "சித்து" என்று சொல்லுவேன். உயிர் என்கிற மாயம் இல்லாதவற்றை "அசித்து" என்று கூறலாம்! கல் களிமண் போன்ற உணர்வே அல்லாத வஸ்துவில் என்ன "சித்தினை" கண்டிட முடியும்! "ஐம்பூதத்தை சேர்த்து வியன் உலகமைத்தாய்"! ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமேன்றால் "Oh creator, you created such an animated world out of all the inanimates! How could you infuse life into the lifeless"! இது வெறும் உலகல்ல! "வியன் உலகு"! படைப்பாளி இன்றி இத்தகைய பிரம்மாண்டமான சித்து வேலையை எங்கணம் காட்டிட இயலும்?
யாரும் பயன்படுத்தாத வகையில் இறைவன் உலகை "சமைத்தார்" என்கிற வார்த்தை பிரயோகம் காட்டுகின்றார்! ஓவியன் வர்ணம் வைத்து "வரைவான்", ஆனால், இயற்கையன்னை அதே வர்ணத்தை வைத்து "அழகுகள் சமைத்தாய்" என்கிறார்!
இந்த உலகத்தை படைத்த படைப்பாளியை "இயற்கை" என்று அழைக்கலாம் அல்லது "இறைவன்" என்றும் அழைக்கலாம்! இரண்டும் ஒன்று தானே! பெயரில் என்ன இருக்கிறது? "இயற்கையோ" அல்லது "இறைவனோ", அந்த படைப்பாளி கருவிக்கு உரித்த மரியாதை தந்து வாயார "பரமா பரமா பரமா" என்று போற்றி பாரதி தன பாடலின் முடிவை அமைக்கின்றார்!
பாட்டின் முடிவு பகுதியில் பாரதி "பக்தி"யை பற்றியும் "முக்தி"யை பற்றியும் கோடிட்டு காண்பிக்கின்றார்! "முக்தி" என்பது இறைவன் சமைத்த "ஒரு நிலை" என்கிறார்! அதனை அடைந்து விட்டால், உயிருள்ளதும் அல்லதும், பிறப்பும் இறப்பும், உணவும் மலமும், இறைவனும் இயற்கையும் எல்லாம் ஒன்றுதான் என்கிற உண்மை புலப்படாலாம்! இதனை பாரதி சொல்லாமல் சொல்லுவது போல என்னுடைய அத்வைதம் சார்ந்த உள்ளம் அர்த்தம் கொள்ளுகிறது!
தொண்ணூறு வயது தாண்டி வாழ்ந்து செத்த தந்தை பெரியார் முக்தி அடைந்தாரா என்று எனக்கு தெரியாது. தனது குடும்பத்துக்கு சொத்து சுகம் எப்படி சேர்த்து பெருக்குவது என்கிற சாதுர்யம் நன்றாக கற்றுக்கொண்டுவிட்டாலும், தற்போது தொண்ணூறு தாண்டிவிட்ட கருணாநிதியும் எத்தனை தூரம் முக்தி அடைந்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது.
அனால் 38 வயதே வாழ்ந்து மடிந்த பாரதி முக்தி அடைந்த நிலை பெற்றுவிட்ட மாதிரி தான் எனக்கு தோன்றுகிறது. மேற்கண்ட மாதிரி அவர் எழுதிய தத்வார்த்தமான பாடல்கள் வேட்கையுள்ள மனங்களுக்கு நல்ல அறிவு தீனி!
நான் அடுத்த முறை வலைப்பதிவு செய்யும் வரை, நீங்கள் சந்தோஷ பாக்கியம் பெற்று பெறு வாழ்வு வாழ என் வாழ்த்துக்கள்!
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ,நாத்தழும்பேர நாத்திகம் பேசும் கயவர்களுக்கு உறைக்கச் சொன்னீர்கள்.அருமை அருமை
ReplyDeleteமிக அழகான பாடல். சித், அசித் என்று இரண்டை சொல்லும் பொழுது அது அத்வைதம் (இரண்டின்மை) ஆகாதே !?
ReplyDeleteஇதில் சித் என்பது அறிவுள்ளது ; அதாவது ஜீவாத்மா; ஜீவன்களின் உள்ளிருந்து இயக்கும் ஆத்மா. அசித் என்பது அறிவற்றது. ஜீவாத்மாவை தவிர மற்றவை அனைத்தும். நம் உடலே அசித்துதான். சித்துடன் சேர்ந்தாலே அது இயங்கும். தன்னிச்சையாக இயங்காது. மரணத்தில் சித் என்கிற ஆத்மா விலகிவிடும்.
ஐந்து பூதங்கள் கொண்ட இவ்வுலகத்தை நமக்காக படைத்தான் இறைவன். அதில் இல்லாததொரு வர்ணம் கிடையாது. அற்புதமான படைப்பு.
ஆத்மாவிற்காக முக்தி (விடுதலை, மீண்டும் பிறவாமை) என்ற ஒரு நிலையைப் படைத்தான். அதை அடையும் வழி என்ன?
அதற்காக, பக்தி ( பக்தியோகம் .. கீதை) என்றொரு வழியையும் காட்டினான் இறைவன். அவனே பரமம், அதாவது பரமாத்மா. அவன் திருவடிகளில் சேர்வதே முக்தி.
(கீதையில், என்னை சரணமாகப் பற்று; நான் உனக்கு முக்தி அளிக்கிறேன் என்று உறுதி மொழி அளித்தான்.)