Saturday, August 30, 2014

அறிவிலியும் பிரிவினையும் (Ariviliyum Pirivinaiyum)


அறிஞர் அண்ணா திராவிட இயக்கத்தில் இருந்து வெளியேறி "திராவிட முன்னேற்ற கழகம்" தொடங்க முடிவு செய்த பொழுது தந்தை பெரியார் இப்படி சொல்லி இருப்பாரோ? "அட போங்கடா வெங்காயம், பிரிஞ்சு போற அந்த கண்ணீர் துளிகள் கிடக்கட்டும். நாம பாட்டுக்கு நம்ம பொழப்பை பார்த்துக்கிட்டு இருப்போம், அதுங்க முன்னேறுதா இல்லையா பார்ப்போம்!"

இந்த கட்டுரை திராவிட அரசியலை கிண்டல் செய்வதற்காக எழுதினார் போல தோன்றினாலும் ஒட்டு மொத்த மனிதர்களையும் கிண்டல் செய்வதே என் நோக்கம். தற்போது இருக்கும் எங்கள் "ஒக்லஹோமா தமிழ் சங்கம்" பிளவுப்பட்டு ரெண்டுபடும் நிலைமை வந்த பிறகு சாதாரண மனிதனாகிய நான் வேறு என்ன தான் செய்ய?! யாருக்காவது வெசவு வைது வைக்க வேண்டாமா? அகப்பட்டான் "அறிவிலி மனிதன்"!

இந்தியாவில் இருந்து எங்களை பிரித்து "தனி தமிழ்நாடு கொடுங்கள்" என்று அறுபதுகளில் முட்டாள் தனமாக கோஷமிட்டவர்கள் தானே நாம்? அந்த பிரிவினை புத்தி லேசில் மனதிலிருந்து அகன்று விடுமா? அண்டைய மாநிலம் ஆந்திராவிலிருந்து தெலுங்கானா குட்டி போட்டாயிற்று! இன்னும் எத்தனை மாநிலம் பிளவுபட போகிறதோ! இங்கே ஒக்லஹோமா தமிழ் சங்கம் சந்தி சிரிக்காமல் சாந்தி நிலவ வேண்டும்!

நட்ட நடு சபையில் பாஞ்சாலி தேவி போல அபலையாக நிற்கும் போது இருக்கும் பணிவு பரம சிவன் கழுத்துக்கு போய் பாம்பாக அமர்ந்து படம் எடுக்கும் போது எங்கே போனது? புட்டக் கொழுப்பு அளவுக்கு மீறி மிகுதியாக வளர்ந்து மீசை முறுக்கேறி தலைக்கு செருக்கேரிய பிறகு உயரத்துக்கேற்றிய ஏணியை மனிதன் என்றைக்கு தான் நினைத்தான்? அது மனிதனின் மடைமை நிலைமை. நிற்க. பிழைத் திருத்தம். மனிதன் மட்டும் அல்ல, விலங்குகள், மற்றும் அணைத்து உயிரினங்களையும் ஆண்டவன் அப்படிதான் பிழையான உத்தியுடன் படைத்திட்டான் போல! ஆக, இது ஆண்டவன் செய்த தவறு, அவனையும் வைது வைப்போம்!



மேலே உள்ள சூர்யவம்சம் படக் காட்சியை கண்டு சிரித்து மகிழுங்கள்! ஆர். சுந்தரராஜனும் மணிவண்ணனும் நடித்த அற்புதமான போதை தரும் காட்சி! மது போதை அல்ல! புகழ் மற்றும் அறிவு மிகுதியால் அல்லது அறிவு குறைவால் வரும் திமிர் தரும் போதை! ஆர். சுந்தரராஜன் அமைதியாக உட்கார்ந்துகொண்டு தான் பாட்டுக்கு தனியாக "தண்ணி" அடிக்க தொடங்கியிருப்பார். அப்போது அங்கே வரும் மணிவண்ணன் முதலாளி தனக்கும் "தண்ணி ஊற்றிக் கொடுப்பார்" என்று ஏக்கத்துடன் அவரை பார்ப்பார். ஆர். சுந்தரராஜனும் "பாவம் தொழிலாளி, போனால் போகிறது, கொஞ்சம் தான் ஊற்றி கொடுப்போமே" என்று பரிவு காட்டி உபசரிப்பார்! மணிவண்ணனும் இரண்டு மூன்று "பெக்குகள்" உள்ளே சென்ற பிறகு கொஞ்ச கொஞ்சமாக திமிர் ஏறி ஒரு அலப்பறை விடுவார் பாருங்கள்! அட்டகாசமான நகைச்சுவை!

இறைவன் ஏற்கனவே "வெள்ளை தோல்", "கருப்பு தோல்" என்று நிறத்தால் நம்முடன் விளையாடி விட்டான்! இயற்கையாக வந்த நிற பேதங்கள் போதாது என்று நம் அறிவால் வந்த பேதங்கள் தான் எத்தனை எத்தனை! இருக்கும் ஒரே ஒரு இறைவனை அவரவர் அறிவுக்கண்ணால் விதம் விதமாக பார்த்து, அல்லா என்றும், ஏசுபிரான் என்றும், கிருஷ்ணா என்றும், கூப்பிட்டு பேதம் கிளப்பியாயிற்று! இறைவனுடன் பேச ஏது செய்யும் வெவ்வேறு மொழிகள் தானே மதங்கள்? இந்த மதங்களால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக எத்தனை பெரிய பிரச்சினைகள் உருவாகியாயிற்று!

வெள்ளையுமின்றி கருப்புமின்றி பெரும்பான்மையாக கபில நிற தோல்காரனான இந்தியன் அக்கபோர் செய்ய பாஷையாலும் பிரிவினை செய்தான்! மொழியா முக்கியம்? நாம் என்ன சொல்ல வந்தோமோ அந்த கருத்து தானே முக்கியம்? சொல்ல வந்த கருத்தை மறந்து சொல்ல பிரயோகப்படுத்திய பாஷையை (மதம், மொழி) வைத்து எத்தனை சண்டை! எனது உசத்தி, உனது தாழ்த்தி என்று எத்தனை பிரிவினை! "ஆஹா, சரியான போட்டி, நன்றாக சண்டையிட்டு மடிந்து சாகுங்கள்" என்று இம்சை அரசன் புலி கேசி வடிவேலு மாதிரி சண்டையிட மைதானம் அமைத்து கொடுத்து நாம் முட்டாள்தனமாக ஊக்கப்படுத்தி தொலைத்துவிட்டோம் இந்த அரக்கனை!

இறை வேட்கை தேடலில் அறிவு மேம்படும் போது தத்வார்த்தமான பிரிவுகள் ஏற்படுவது சகஜம். கிருத்தவன் கத்தோலிக்கன் என்று தொடங்கி மற்ற பல கிளைகளாகவும் பிரிந்தான். துலுக்கன் ஷியா என்றும் சுன்னி என்றும் பலவகையாக பிரிந்தான். சிந்து சம வெளி நாகரிகக்காரன் சைவம் என்றும் வைணவம் என்று ஆரம்பித்து வித விதமாக பிரிந்து தொலைத்தான்!

அடுத்தவன் வீட்டில் சண்டை மிகுந்து அவன் பிளவுப் பட்டால் நமக்கு கொண்டாட்டம் தான்! ஆனால் நாம் பிளவுபடுவது உலகத்துக்கே தெரிந்து அவர்கள் நம்மை பார்த்து இளக்காரம் செய்து கொண்டிருக்கும் போது அதை அறியக்கூட இன்றி அறிவுக்கெட்டு கிடக்கின்றோமே! அடக் கண்றாவி! இது என்ன நிலைமையடா சாமி!

உளியை கல்லின் மேலே வைத்து மென்மையாக தட்டி தட்டி ஒரு அழகு சிலை உருவாக்கலாம்! வேகமாய் ஒரே போடு போட்டு கல்லை இரண்டாகவும் உடைக்கலாம்! உளியும் அறிவும் ஒரே மாதிரி தான்! ஆக்கவும் செய்யலாம், அழிக்கவும் செய்யலாம்! அதன் தன்மை அப்படி! ஆக்க நினைத்தது அழிந்து விட்டால், அதை "அறிவு மிகுதியால்" வந்த நல்லதென்று மார் தட்டி கொள்ளப் போகிறோமா, அல்லது "அய்யய்யோ அறிவிலியாகி போட்டு உடைத்துவிட்டோமே" என்று வருத்தப்பட போகிறோமா!

உம்மாச்சி, பிரிவினைகள் தவிர்க்க முடியாதவை என்று நீ நன்றாக அறிவாய்! எல்லாம் உன் செயல்! நீ தான் எங்கள் கண்ணை குத்தாமல் எல்லா பிரிவினைகள் வரும் பொழுதும் எங்களுக்கு பெருத்த நட்டம் வாராது நட்டக் காப்பு (damage control) செய்ய வேண்டும்!

மஹாகவி பாரதியின் கவிதை தான் ஞாபகம் வருகிறது - "உலகிலே சாந்தி நிலவ வேண்டும்"!

ஓம்! சாந்தி! சாந்தி! சாந்தி!

No comments:

Post a Comment