Friday, October 24, 2014

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் (Pichchai Paththiram Aendhi Vandhaen)

வகுளாபரணம் பதினாலாவது மேளகர்த்தா ராகம். இளையராஜா "நான் கடவுள்" படத்தில் வகுளாபரணம் ராகத்தில் அட்டகாசமான ஒரு பாடல் இசையமைத்து இருக்கிறார்.  வெறும் இசை மாத்திரம் அல்ல, அவரே அதனை எழுதியும் இருக்கிறார்! "பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்". அந்த ராகத்தில் ஜனரஞ்சகமான முறையில் இதுவரைக்கும் சினிமா இசையமைப்பாளர்கள் யாரும் இத்தனை அழாகாக  மெட்டமத்தது இல்லை. 

ஆனால் அந்தப் பாடலை கேட்கும் நிலையில் அந்த நோயாளி இல்லை. பாவம் அவன்! இருதய ரோகம் முற்றிப்போய் விட்டது. தன்னுடைய ஒரு காலை ஏற்கனவே கண்ணமா பேட்டையில் ஊன்றியாயிற்று. இப்பூவுலக ஆசை தீராத காரணத்தினால் எஞ்சியிருந்த காலில் ஊசலாடும் உயிரை ஸ்திரப்படுத்த எத்தனித்து பூமி மாதாவிடம் உயிர் பிச்சை வேண்டி நின்றிருந்தான்.

அவனுடைய ஆசுபத்திரி அறையில் அவனை தவிர வேறொருவரும் வீற்றிருந்தார். அவர் தான் சாக்ஷாத் கடவுள்! ஆனால் அவர் சர்வ வல்லமை பொருந்திய அல்லா அல்ல, ஏசு அல்ல, கிருஷ்ண பரமாத்மாவும் அல்ல! வெறும் விதிக் கடவுள்! இந்த உலகத்தில் நடக்கின்ற நியாயம் அநியாயம் எதனையும் தடுக்க சக்தியும் திராணியும் இல்லாத விதிக் கடவுள்! அந்த நோயாளிக்கு எதனாவது மருந்து மாத்திரை வாங்கி வர வேண்டும் என்றால், அந்த சின்ன காரியத்தைக் கூட அந்த விதிக் கடவுளால் செய்ய இயலாது. அவரிடம் கிரெடிட் கார்டோ அல்லது ருபாய் நோட்டு பணங்களோ ஒரு மண்ணும் கிடையாது. அவரையெல்லாம் கடவுள் என்று யாருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். யாரோ அவரை அந்தக் கணத்தில் கூப்பிட்டா மாதிரியும், நல்லெண்ணத்தில் அங்கு வந்த முதல் உதவி மாதிரியும், அவர் வந்துதான் அந்த பிணியுற்ற மானுடனுடைய உயிரை காப்பற்றப் போவது போலவும் பாவனை செய்து,  வெறுமனே அறையில் வெட்டியாக வீற்றிருந்தார்.

விதிக் கடவுளுக்கு  போரடிக்க தொடங்கி விட்டது. நோயாளியோ தன்னிலை அறியாது மயக்கமாய் படுத்து கிடக்கிறான். நுரையீரலால் தானாகவே காற்றை உள்ளிழுக்கும் சக்தி போய் விட்டதால், இயந்தரங்கள் அவனை சுவாசிக்க வைத்துக் கொண்டிருந்தன. மௌனமான அந்த நேரத்தில் இயந்திரங்களின் புஸ்சு புஸ்ஸென்ற மூச்சு சத்தம் பேரிரைச்சலாய் அந்த அறையை வியாபித்து இருந்தது.  விதிக் கடவுள் அந்த இரைச்சலை தவிர்க்க தன் ipodஐ எடுத்து தலையணி கேட்பொறியை காதில் பொருத்திக் கொண்டார். ஒரு நல்ல இளையராஜாவின் தமிழ் பாட்டு கேட்கலாமே என்று youtubeல் தேடிப் பார்த்து ஒரு பாடலைப் போட்டார்! அவர் போட்டப் பாட்டு என்ன தெரியுமா? நான் முதல் பத்தியில் சொன்னேனே, அந்த வகுளாபரண ராகப் பாட்டு! மது பாலக்ருஷ்ணன் பாடிய பாட்டு. 

ஜம்மென்று தபலாவும் மிருதங்கமும் "தகிட தகிட" என்று திஸ்ர நடை போட, ஏக தாளத்தில் அந்தப் பாட்டு ஆரம்பித்தும் விதிக் கடவுளின் மனது குதூகலிக்கத் தொடங்கிவிட்டது! எப்பேர்ப்பட்ட வித்தகன் இளையராஜா! ஒரு சின்ன மெட்டை அவனிடம் கொடுங்கள், அதற்கு ஏற்ற  மாதிரி விதவிதமான ஆடை அணிகலன்கள் அணிவித்து பூ முடித்து சிங்காரித்து மனதினில் எப்போதுமே ரீங்காரமிடும் தேவதைப் போன்ற இசைப் பெண்ணாக மாற்றி  அரை மணிநேரத்தில் உங்களிடமே அவளைக் கொடுத்து விடுவான். 

இந்த பாடல் சன்னமான புல்லாங்குழல் மெல்லிசையில் மாயாமாளவ கௌளையின் அந்தர காந்தாரத்தோடும், தோடியின் கைசிகி நிஷாதத்தோடும் தொடங்கி விதிக் கடவுளின் காதை வருடியது! இசை மீது  வெறும் நாட்டமே உள்ள ஒரு பாமர சாதரணன் அந்தப் பாடலைக் கேட்டால்,  ஆஹா எத்தனை அருமையான மெட்டு என்று தோன்றும்! அதே சமயம் சாஸ்திரீய சங்கீதம் அறிந்த ஒரு ஆள் கேட்டால், "ஆஹா, பேஷ், பேஷ், எத்தனை அருமையான வகுளாபரணம் இது" என்று மெச்சும்! அந்த மாதிரி விந்தையான பாட்டு!

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பெனும் 

பாட்டின் பல்லவியை கேட்டவுடன் விதிக் கடவுளுக்கு புல்லரித்தது! ஆஹா, இது தத்வார்த்தமான பாடல் போலிருக்கிறதே என்று புருவத்தை உயர்த்தினார். தன்னுடைய உடம்பையே பிச்சைப் பத்திரமாக உருவகப் படுத்தி இந்த உலகில் பிச்சை எடுக்க வந்ததாக அல்லவா இளையராஜா கூறுகிறான்! 

வகுளாபரண ராகத்தின் சுத்த தைவதத்தை அழகாக கமகம் கொடுத்து ஆரம்பித்த அனுபல்லவியை கூர்ந்து கவனித்தார் "அம்மையும் அப்பனும் தந்ததா இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா"!

முந்தைய ஜன்மத்தில் பண்ணிய பாவம் தீர கிடைத்தா இந்த பிறப்பு? அந்த பத்தியில் "வினை"யைப் பற்றி இளையராஜா பாடியது விதிக் கடவுளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது! ஏனென்றால், வினையும் விதியும் பின்னிப் பிணைந்த நகமும் சதையும் போன்றவை அல்லவா! அதுவும், இளையராஜா "வல்வினை" என்று உரிச்சொல் பயன்படுத்தி தன்னை அத்தனை வலியவனாக சொன்னது கேட்டு விதிக் கடவுள் புளகாங்கிதம் அடைந்தார்! உடனே அவருக்கு இளையராஜாவை பார்க்க வேண்டும் என்று தோன்றியது!

நடக்கப் போவதை தடுத்து நிறுத்தும் சக்தி இல்லாதவராயினும் ஒரு ஆளை சட்டென்று ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றும் சக்தி மாத்திரம் விதிக் கடவுள் பெற்றிருந்தார்! ஆகையால், ஒரு மாஜிக் செய்து விதிக் கடவுள் இளையராஜாவை அந்த அறைக்கு ஆர்டர் பண்ணிய பீட்சா மாதிரி க்ஷண நேரத்தில் தருவித்தார்! தன்னுடைய வீட்டிலிருந்து திடீரென்று ஒரு ஆசுபத்திரி அறைக்கு எப்படி இடம் பெயர்ந்தோம் என்று இளையராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை! எதிரே இருந்த நோயாளி யார் என்று தெரியவில்லை. சரஸ்வதி சபதம் படத்தில் வரும் சிவாஜி மாதிரி வேஷமிட்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்த விதிக் கடவுளையும் யாரென்றும் புரியவில்லை. நோயாளியோ பேச்சு மூச்சின்றி இருக்கிறான். ஆகையால், இளையராஜா விதிக் கடவுளைப் பார்த்து "நீங்கள் யார், நான் எப்படி இங்கு வந்தேன்" என்று கேட்டார்! 

உடனே விதிக் கடவுள் சொன்னார் "என்னைதான் நீ முன்னமேய அறிவாயே, என்னைப் பற்றி பாட்டு வேறு எழுதி இருக்கிறாய், நான் தான் விதிக்  கடவுள்". உடனேயே இளையராஜாவுக்கு தெளிவு பிறந்தது. அவர் விதிக் கடவுளை குசலம் விசாரித்தார். பின்னர், "இந்த நோயாளி யார், இவனுடைய அறையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கீர்கள் என்றார்?

இளையராஜா அந்த மாதிரி கேட்டது தான் தாமதம் அந்த நோயாளியின் தலைமாட்டில் இருந்த இதய மின்னலை கண்காணிக்கருவி (cardiac  monitor) "பீப் பீப்" என்று அலறலாக ஓசை எழுப்பியது. உடனே பதறியடித்துக் கொண்டு சில செவிலியர்கள் அந்த அறைக்குள் வந்தனர். அந்த நோயாளியை பரிசோதித்து விட்டு ஆயாவிடம் "இந்த பேஷண்டுக்கு ஹார்ட் ரேட் ஜாஸ்தியாகி விட்டது, மற்றும் ப்ளட் பிரஷர் கம்மியாகி விட்டது" என்று கூறி டாக்டரை அழைத்து வரச் சொல்லி தூது அனுப்பினர். 

இதைப் பார்த்த பின்னர் இளையராஜா கொஞ்சம் டென்ஷன் ஆகி விட்டார். "இந்த ஆளை பார்த்தா உயிர் போறா மாதிரி இருக்கான், இந்த மாதிரி ரூமுக்கு என்னை எதுக்கு கூட்டி  வந்திங்க"என்று பதட்டத்துடன் விதிக் கடவுளிடம் கேட்டார்!  விதிக் கடவுள்  சொன்னார் "என்னோட பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா! பிறப்பும் இறப்பும் நான் டெய்லி பார்க்கிறது தானே"! அவர் அந்த மாதிரி கூறவும் மருத்துவர் அந்த அறைக்கு வரவும் சரியாக இருந்தது. அப்போது விதிக் கடவுள் இளையராஜாவிடம் கேட்டார் "அப்புறம், ரிடயர்டு லைப் எப்படிப் போகிறது இளையராஜா, நீ சொல்லு".

அந்த கேள்வியை கவனிக்காது இளையராஜா மருத்துவர் என்ன செய்யப் போகிறார் என்பதை கூர்ந்து கவனித்துக்கலானர். ஏனென்றால் அந்த கண்காணி கணிப்பொறி இயந்திரம் வித விதமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. அந்த நோயாளியின் முகம் வெளிறிப் போய் இறக்கும் தருவாயில் இருப்பது போலிருந்தான். அந்த சூழ்நிலையின் அழுத்தம் புரியாது விதிக் கடவுள் ஒரு விளையாட்டு புத்தியோடு இருந்தார். திரும்பவும் இளையராஜாவுக்கு தன்னுடைய கேள்வியை ஞாபகப் படுத்தினார்.  சற்று சலிப்புடன் இளையராஜா சொன்னார், "நான் ரிடையர் ஆகி விட்டேன் என்று உங்களுக்கு யார் சொன்னது". 

அதற்கு விதிக் கடவுள் சொன்னார் "A. R. ரஹ்மான் வந்த பிறகு வாலண்டியர்  ரிடயர்மென்ட் கொடுத்து உங்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டதாக சொன்னார்களே" என்று போட்டு வாங்கினார்.  சட்டென்று இளையராஜாவுக்கு கோபம் வந்தது. "அடடா, அப்படியா மக்கள் பேசிக் கொள்ளுகிறார்கள்? என் மேலே பயித்தியம் பிடித்து அலையும் இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் படத்துக்கு எல்லாம் நான்தான் பட்டையை கிளப்பும் வகையில் இசை அமைத்துக் கொண்டிருக்கிறேனே, நீங்கள் அதையெல்லாம் அறியவில்லையா? மிஷ்கினின் படம், கௌதம் மேனனின் NTEP, பாலா, மற்றும் பால்கியின் இந்தி படங்கள் என்று எத்தனை பணி  செய்து கொண்டிருக்கிறேன்" என்றார்.

அப்போது விதிக் கடவுள் சொன்னார் "இளையராஜா, நான் உங்களோடைய ரசிகன். சும்மா உங்களுடன் விளையாடிப் பார்த்தேன். நீங்கள் இப்போதும் அருமையாக இசை அமைத்துக் கொண்டிருக்கீர்கள் என்று நான் நன்றாக அறிவேன். In  fact, இப்போது தான் உங்களுடைய பிச்சை பாத்திரம் பாட்டு கேட்டு முடித்தேன். வகுளாபரணம் ராகத்தில் அசத்தியிருக்கிரீர்களே" என்றார். உடனே இளையராஜாவுக்கு கொஞ்சம் பெருமிதமாகிற்று! "அது ரொம்பவும் கடினமான ராகமாயிற்றே! நீங்கள் எப்படி அறிவீர்கள்" என்றார். அதற்கு பதிலாக விதிக் கடவுள் ஒரு புன்னகையை மட்டும் சிந்தினார். 

பின் இளையராஜா "அதே படத்தில் பந்துவராளி ராகத்தில் அட்டகாசமாக ஓம் சிவோஹம் பாட்டு போட்டிருக்கிறேனே, அதனை கேட்டீர்களா? அதில் என்னுடைய  ரிதம் எப்படி?" என்றார்.  மிகவும் ஈகோ உள்ளவராகையால், விதிக் கடவுளின் சங்கீத ஞானத்தை பரிசோதித்துப் பார்க்கவும்  எண்ணினார்! "பந்துவராளி ராகத்துக்கு இன்னொரு  பெயர் இருக்கிறது, அது என்ன தெரியுமா?" சோதிக்கும் முறையில் வினவினார். விதிக் கடவுள் "நான் மெய் மறந்து கேட்டப் பாடல்களில் ஒன்று ஓம் சிவோஹம் - அருமையான காமவர்த்தினி ராகம்" என்று தன்னுடைய பாராட்டுதலையும், மற்றும் இளையராஜா கேட்ட சங்கீத கேள்விக்கான பதிலும் தந்தார்! 

விதிக் கடவுளின் சங்கீத ஞானத்தை கண்டு இளையராஜா "இந்த சாமி ஒன்றும் அறியாத சாமி இல்லை" என்று உணர்ந்து கொண்டார். இதற்கிடையில் அந்த நோயாளின் உடல் நிலை வினாடிக்கு வினாடி மோசமாகிக் கொண்டிருந்தந்து! ஆனால் விதிக் கடவுளோ அந்த நோயாளியைப் பற்றி கவலையுறாது சாவகாசியமாய் இளையராஜாவுடன் மேலும் மேலும் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். "ஆமாம், இயக்குனர் ஞான ராஜசேகரனுடன் உனக்கு சண்டையா? அவனுடைய மோக முள், மற்றும், பாரதி படங்களுக்கு அம்சமாக பாடல்களை போட்டுக் கொடுத்து விட்டு ஏன் பெரியார் படத்தில் அவனை கை துடைத்து விட்டாய்?". 

இந்த கேள்வியை கேட்டவுடன் இளையராஜாவுக்கு பொத்துக் கொண்டு வந்தது கோபம்! பெரியார் மாதிரி ஒரு அற்ப மனிதனை உயர்த்திக் காண்பிக்கும் படத்துக்கு நான் எப்படி இசையமைப்பேன்? நானோ பரம ஆஸ்திகன், அந்த ஆளோ hardcore நாஸ்திகன். ஆகையால் நான் அந்த படத்தை ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டேன்" என்றார். இதனை கேட்டவுடன் விதிக் கடவுளுக்கு ஒரு குறும்பு யோசனை தோன்றியது. எதிர் எதிர் கொள்கைகள் உள்ளவர்களை ஒரே அறையில் சந்திக்கச் செய்தால், அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளத் தொடங்கினால், பார்க்கிறவனுக்கு கொண்டாட்டம் தானே. ஆகையால், தன்னுடைய மாஜிக் சக்தியை உபயோகப்படுத்தி திடீரென தந்தை ஈ. வெ. ரா. பெரியாரை அந்த அறைக்கு மாயமாய் பிரசன்னமாக செய்தார்! 

1973ல் மடிந்த பெரியார் திடீரென்று எமலோகத்திலிருந்து பூதேசத்திற்கு வருவோம் என்று சற்றும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவர் இளையராஜவுடனும், மற்றும் விதிக் கடவுளிடமும் அறிமுகம் தொடங்கி ஆரம்ப சல்லாபக் காலம் முடிவதற்கு முன்பே அந்த அறையில் மருத்துவ பணியாளர்களின் நடமாட்டம் மிகுதியாற்று! ஏனென்றால், அந்த நோயாளிக்கு உடம்பு ரொம்பவும் முடியவில்லை. ரத்த அழுத்தம் திரும்ப திரும்ப சோதித்துப் பார்த்தாலும் 60/40 என்கிற குறைவான மதிப்பே காட்டிற்று அந்த நாடியழுத்தமானி! இளையராஜா டென்ஷன் ஆன மாதிரியே தந்தை பெரியாரும் "அட என்னடா வெங்காயம் இது, சாகப் போறவனோட அறைக்குள்ள என்னைய எதுக்கு கூட்டி வச்சிருக்கான் இந்த ஆள்" என்று நினைத்து வியந்தார்.

ஆனால், அந்த அறையில் நடக்கும் மருத்துவ களேபரம் விதிக் கடவுளை பாதித்த மாதிரி தெரியவில்லை. இருவருக்கு நடுவே சிண்டு முடிந்து சண்டை மூட்டி விடும் நாரதப் பெருமான் மாதிரி அவர் தன்னுடைய குறும்பின் உச்சியில் இருந்தார். "என்ன பெரியாரே, உனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லையாமே" என்று கொக்கரித்துக் கொண்டே வினவினார் விதிக் கடவுள். நாத்திகப் பேரொளியான பெரியாருக்கோ, தன் வாயினால், "விதிக் கடவுள்" என்று யாரையும் கூப்பிட மனசு ஒப்பவில்லை. அதே சமயம், சுய மரியாதை இயக்கத்தை சேர்ந்த காரணத்தினால் "விதியரசன்" என்றும் கூப்பிடவும் இஷ்டமில்லை. சரி, பாரதியார் சொன்ன மாதிரி, விதியை "கொடுங்கூற்று" என்று குறிப்பிட்டு பேசலாம் என்று முடிவு செய்தார்!

"கொடுங்கூற்றே, நீ என்னை முதலில் இந்த அறையிலிருந்து வெளியே விடு, இந்த ஆள் இப்போ மண்டைய போட்டான்னா, அதை பாக்கிறதுக்கு சகிக்காது, மற்றும் செத்த பிணத்தை நான் காசியில நிறைய பாத்திருக்கேன், ஒரு மாதிரி எனக்கு வாந்தி வரும், so, என்னை இந்த விளையாட்டிலேர்ந்து விட்டுடு". பெரியார் இந்த மாதிரி பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்த நோயாளிக்கு சட்டென்று மாரடைத்து, மரணத்தின் வாயிலில் நுழைந்து விட்டான்! நாடித் துடிப்பு அடங்க தொடங்கினாலும் கூட இருதயம் துடித்துக் கொண்டிருக்க வாய்ப்பு உள்ளதை அந்த மருத்துவர் நன்கு அறிந்திருந்தார். ஆகையால் அந்த கண்காணி இயந்திரத்தை நோக்கினார். அந்த ஆளின் இதய துடிப்பு normal  sinus  rhythmல் இருந்து மாறி இதய கீழறை விரைதுடிப்பாக (ventricular tachycardia) மாறிக் கொண்டிருந்தது! "Nurse, place the defibrillator pads on his chest, he is going to go into Ventricular fibrillation, let us shock him" என்றார் மருத்துவர். 

1973ல் இறந்த பெரியார் கலர் தொலைக்காட்சி கூட அவ்வளவாகக்  கண்டதில்லை, ஆகையால், 2014ஆம் ஆண்டின் விஞ்ஞான வளர்ச்சியை கண்டு பெரியார் மிகவும் வியந்துபோயிருந்தார். இறந்து கொண்டிருக்கும் அந்த மனிதனை பிழைக்க வைக்க என்னென்ன புதிய உத்திகள்! இதய மின்னலையை கண்காணிக் கருவி (cardiac  monitor) ஒருவனுடைய இருதயத்தில் நடந்துக் கொண்டிருக்கும் உயிர் போராட்டத்தை பிட்டு பிட்டு காண்பிக்கிறது! மருத்துவரும், defibrillator கருவியை வைத்து "nurse shock him at 200 joules" என்றார்.

இந்த நிகழ்ச்சியெல்லாம் சட்டை பண்ணாது விதிக் கடவுள் பெரியாரை பார்த்து திரும்பவும் அதே கேள்வியை கேட்டார். "உனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதாமே".  இந்த சமயத்தில், நை நை என்று இந்த விதி, "கடவுள் நம்பிக்கை அது இது என்று அபத்தமாகப் பேசிக்கொண்டிருக்கிறானே, அவனுடைய வாயை பூட்டு போட்டு பூட்டி வைப்போம்" என்று எண்ணினார்! "ஆமாயா, நான் இப்பவும் சொல்லறேன் கேட்டுக்கோ, எனக்கு என்றைக்குமே கடவுள் நம்பிக்கை கிடையாது, நான் என்னுடைய கொள்கையிலிருந்து மாறுறதா  இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்றார்!

இதனை கேட்டவுடன் இளையராஜா ஆடிப் போய்விட்டார். பெரியார் இந்த மாதிரி நயமற்ற ஆள் என்று அவர் கற்பனை கூடப் பண்ணிப் பார்த்ததில்லை! "என்னங்க அறிவில்லாம இப்படி உளருரீங்க" என்று சூடாக ஆரம்பித்ததார் இசை ஞானி! பெரியாரும் இளையராஜாவும் இந்த மாதிரி நேர் எதிர் துருவமாக சண்டை தொடங்கும் போது அந்த நோயாளி காப்பற்ற முடியாத அதல பாதாளத்துக்கு போய் கொண்டிருந்தான். இதய கீழறை விரைதுடிப்பிலிருந்து (ventricular tachycardia) இப்போது கீழறை குறுநடுக்கமாக (ventricular fibrillation) மாறிவிட்டிருந்தது. மருத்துவர் கொடுத்த ஆணையின் படி செவிலியர்கள் defibrillator எண்ணிக்கையை முதலில் 200 joules, பின்னர் அதிகம் ஆக்கி 300 joules என்று அந்த ஆளுக்கு பச்சக் பச்சக் என்று shock அடித்துக் கொண்டிருந்தனர். 

இளையராஜா பெரியாரை பார்த்துச் சொன்னார், "நீங்கள் எத்தனை முரட்டுத்தனமான ஆள் என்றறிந்தது நல்லதாகப் போய்விட்டது! ஏனென்றால் உங்களைப் பற்றிய படத்துக்கு இசையமைக்காததுக்கு நான் ஒன்றும் வருத்தப் படத் தேவை இல்லை. கடவுளை நம்பாதது ஒரு முட்டாள் தனம். நீங்கள் என்ன, அம்மையும் அப்பனும் இன்றி தான்தோன்றிதனமாக இந்த பூமியில் பிறந்தா வாழ்ந்தீர்கள்? நம்மை எல்லாம் ஆக்கி இந்த உலகத்தில் போட்டது ஒரு பரா சக்தி, அதனை நம்பாமல் எப்படி இருக்க முடியும்? உயிர் கொடுத்த இறைவன் மீது பக்தி இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, ஒரு நன்றியாவது இருக்க வேண்டாம்? நீ எல்லாம் என்னய்யா மனுஷன்?!" என்றார்.

பெரியார் உடனே கொஞ்சம் சூடானார். "ஏய், இளையராஜா! வானுலகில் உட்கார்ந்து நம்மை எல்லாம் இறைவன் உண்டாக்கியதை நீ பார்த்தது மாதிரி சொல்லுகிறாயே! நான் யார் தெரியுமா? பகுத்தறிவுவாதி! நான் என் கண்ணால் காணாததை நம்ப மாட்டேன். இறைவனை என் முன் வரச் சொல், ஏதாவது இறை வித்தையை செய்து காண்பிக்க சொல், பின்னர் நம்புகிறேன் நான்!" என்றார்.

இவர்கள் இருவரும் இந்த மாதிரி சாதாரணமாக தர்க்கம் செய்ய தொடங்கி, பின்னர் அவர்களின் குரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தன. இதற்கிடையில் ventricular fibrillationல் சிக்கித் தவித்த அந்த மானுடனுடைய உயிரை கண்ணுக்கு தெரியாத எம தர்மராஜா கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக் கொண்டிருந்தான். நாடித் துடிப்பு அடங்கி ஐந்து நிமிடம் ஆகிற்று. மருத்துவரும் "okay nurse, shock him one last time at 360 joules" என்றார். தங்களுக்கு shock அடிக்காதவாறு எல்லாரும் நகர்ந்து நின்று அவனுக்கு கடைசியாக ஒரு முறை shock  கொடுத்தனர். பின் அந்த cardiac monitorஐ அண்ணாந்து பார்த்தனர். அதில் உயிரில்லை. வெறுமனே பச்சை கலரில் ஒரு கிடைக் கோடு!

பெரியாரும் இளையராஜாவும் தங்களது சண்டையை சற்று நிறுத்தினர். அவர்களுக்கு ஒரு மனிதனின் சாவை அத்தனை அருகாமையில் நின்று பார்த்தது மனதை ரொம்பவும் பாதித்து விட்டிருந்தது. "ஐயோ பாவம், இன்று இறைவனடி சென்று சேர வேண்டும் என்று இவன் தலையில் எழுதியிருக்கிறது பார்த்தீர்களா?" என்றார் இளையராஜா! பெரியார் சொன்னார், நானும் 1973லேயே இறைவனடி சேர்ந்து விட்டேன். ஆனால் அங்கு இறைவன் ஒன்றும் காணோம்! நானும் 41 ஆண்டுகளாக சொர்க்கத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன். இறைவன் என்று அங்கே எவனையும் காணோம் என்றார்" கேலியாக!

அப்போது விதிக் கடவுள் தீர்கமாக அந்த இருவரையும் பார்த்தார்: "இளையராஜா, பெரியார், நீங்க ரெண்டு பேரும் எப்பதான் முதிர்ச்சி அடையப் போகிறீர்கள்?" என்றார். பின்னர் "அவன் இறைவனடி சென்று சேரவில்லை. அவன் இறைவனாகி விட்டான்" என்றார். 

இளையராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இறைவனடியா, அல்லது இறைவனா? இளையராஜா இந்த மாதிரி கலங்கிய போது, பெரியாருக்கு ஒரு மாதிரி குஷியாகிப் போனது. "இறைவனைப் போயி செத்த மனுஷனோட compare பண்ணி பேசுகிறான், dead body தான் இறைவன்னு சொல்லறான், ஆஹா, இந்த கொடுங்கூற்று இறைவனை பழித்து பேசுறான், இவன் நம்ம கட்சி தான் போல" என்று நினைத்து அக மகிழ்ந்தார்!

விதிக் கடவுள்  தன் தீர்கமான பார்வையை குறைக்கவில்லை. மேலும் அவர் கூறினார் "இந்த செத்த மனுஷன் தன்னோட மனசுல இருந்த அழுக்கு, கல்மிஷம் எல்லாம் தீர்ந்து இப்ப neutral ஆகிவிட்டான்! இது தான் இறை நிலை! இவன் இனி தன்னைப் பற்றி உயர்வா நினைக்க மாட்டான். மற்றவனைப் பற்றி தாழ்வா நினைக்க மாட்டான். மற்றவனுக்கு இவன் இனி தீங்கு செய்ய மாட்டான். இவனுக்கு இப்ப இன வெறி கிடையாது, ஜாதி  வெறி கிடையாது, மொழி வெறி கிடையாது, எதுவுமே இவனுக்கு கிடையாது.  இவனுக்கு இப்ப எல்லாமே ஒண்ணுதான்! இவன் பரப் பிரம்மம் ஆகி விட்டான்!".

இளையராஜாவுக்கு ஒரே குழப்பமாகப் போய்  விட்டது. உயிர் மாயையா, அல்லது உடல் மாயையா! 

விதிக் கடவுள் சிரித்துக்கொண்டே "ரன்" படத்துல வருகிற "தேரடி வீதியில தேவதை வந்தா" பாட்டில் சில வரிகள் பாடினார்! "இப்பவும் சொல்லறேன் தெரிஞ்சுக்கோ, தட்சணை கொடுத்து புரிஞ்சுக்கோ! வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட" இளையராஜாவையும் பெரியாரையும் பார்த்து புன்முறுவல் பூத்துக் கொண்டே தொடர்ந்தார்.

"எல்லாம் எனக்கு சம்மதம் என்று எப்போது நீ உணருகிறாயோ அப்போது நீ இந்த செத்த பிணம் மாதிரி இறைவன் ஆகிவிடுவாய்! அந்த நிலையை உயிருள்ள போதே அடைகிறவன் மகாத்மா! ஆனால் அந்த நிலையை லேசில் யாருமே அடைய முடியாது!"

கடைசியாக தன திருவாய் மலர்ந்தருளி விதிக் கடவுள் கூறினார்: "இளையராஜா, அடுத்த முறை ஞான ராஜசேகரன் வந்து பெரியார் படத்துக்கு இசையமைத்துக் கொடுக்க சொன்னால், பாகுபாடு பாராமல் இசை அமை! ஏனென்றால், அது தான் உன் தொழில்! தொழிலில் பாகுபாடு என்ன?" பின்னர் பெரியார் பக்கம் திரும்பி சொன்னார் "கடவுள் கடவுள் என்று சிலர் வெறி பிடித்து அலைவதை பார்த்து, அவர்களை திருத்துகிறேன் என்று நீயும் கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று  வெறி பிடித்து அலைந்தால், அப்புறம் உனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்? நீ அவன் மடத்தின் வாசலில் அவனை முட்டாள் என்றெழுதி, பின்னர் அவன் உன்னுடைய வாசலில் உன்னை முட்டாள் என்று எழுதினால், இதில் எவன் தான் ஞானி எவன் முட்டாள்? ஒருத்தருக்கு ஒருத்தர் அறைந்து  கொள்ளவா இந்த உலகத்தில் பிறந்தீர்கள்? அணைத்துக்  கொள்ள அல்லவா?" என்றார்.

தந்தை பெரியாருக்கு ஏதோ புரிகிற மாதிரி இருந்தது. அடுத்த முறை ஜன்மம் எடுத்து வந்து வாழ்க்கைப் பள்ளியில் தொடர்ந்து படித்தால் இன்னும் கொஞ்சம் ஞானம் வரும் போலத் தோன்றியது! ஆனால் ஒரு முறை தானே பூக்கும் இந்த உயிர்ப் பூ! ஆகையால் அவர் பழுத்து ஞானியாகவும் இறைவனாகவும் ஆக அவருக்கு இன்னொரு முறை வாய்ப்பு கொடுக்க இயலாது போய்விட்டான் இறைவன்!

தாரை தப்பட்டை முழங்க பாடையில் புறப்பாடு தொடங்கிற்று!  அந்த செத்து மடிந்து இறைவனான மனிதனை பார்த்து நமஸ்காரம் செய்துவிட்டு பெரியாரும் இளையராஜாவும் அவரவர் இடத்துக்கு செல்ல புறப்பட்டனர்.  விதிக் கடவுள் ஏதோ நல்லது செய்துவிட்ட பெருமிதத்தில் அந்த அறையை விட்டகர்ந்தார்!

No comments:

Post a Comment